டாக்டர் எம்.ஜி.ஆர்



தோற்றம் -17-1-1917
மறைவு -24-12-1987

இளமைப் பருவம்

இராமச்சந்திரன்
இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேன்னுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடை தந்தையின் மறைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்பட்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையாலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவர். இவர் தங்கமணியை மணந்தார். இவர் நோய்க்காரணமாக இறந்தார. அதன்பிறகு சதானந்தவதியை மணந்தார். இவரும் நோய்க்காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.

திரைப்பட வாழ்க்கை

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்.

எம்.ஜி.ஆர் படங்கள்



எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!

எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 - ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 - ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 - ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

நினைத்துப் பாருங்கள்!

சிந்தனைக்குச் சில துளிகள்!

கவியரசர் கண்ணதாசன் 1961 - ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒன்பதாம் தேதி, தி.மு.கழகத்தை விட்டு, விலகிச் சென்றுவிட்டார்.

கழகத்தை விட்டு, விலகிச் சென்ற கவியரசர்; கழகத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் அடைய விரும்பிய திராவிட நாடு கொள்கை பற்றியும், திராவிட நாடு கொள்கையை அவர்கள் கைவிட்டது பற்றியும்; நாட்டையாளும் நிலையில் நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்தால் நேரக்கூடிய அவலங்கள் பற்றியும் ஏராளமாக எழுதினார், மேடை முழக்கங்களும் செய்தார்.

இவற்றையெல்லாம் தனது இதயத்தின் ஒரு பகுதியில் இருத்திக் கொண்ட மக்கள் திலகம்; தனது படங்களில் கண்ணதாசன் பாடல்கள் எழுதக்கூடாது என்று, எந்தத் தயாரிப்பாளரிடமும் கட்டளை பிறப்பித்ததில்லை.

இதனால்தான் தேவர் பிலிம்ஸ் தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த அனைத்துப் படங்களுக்கும் (ஒன்றிரண்டு தவிர) கண்ணதாசனே பாடல்களை எழுதிக் குவித்தார்.

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர். ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார்.

இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.

திராவிட இயக்கத்தில் இருந்தபோது கண்ணதாசன் எழுதிய

‘அச்சம் என்பது மடமையடா!

அஞ்சாமை திராவிடர் உடமையடா!’

என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!

எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலிதமாய் வாகை சூடிய விதங்களை விபரமாய்க் காண்போம்.

ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!

‘மர்மயோகி’ படம் வெளியான ஆண்டு 1951.

“அழகான பெண்மானைப் பார்!
அலைபாயும் கண்வீச்சைப் பார்!”

என்று தொடங்கும் இப்படப் பாடலில்,

வாடாத ரோஜா - உன்
மடிமீதில் ராஜா!
மனமே தடை ஏனையா! - நிதம்

பொன்னாகும் காலம்
வீணாக லாமோ!
துணையோடு உலகாளவா!

என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.

எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

1957 - ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

“கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா!”

இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,

மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
வாழ்வது நமது சமுதாயம்!
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
மாறிவிடாது ஒரு நாளும்!”

என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;

“காமுகர் நெஞ்சில் நீதியில்லை - அவர்க்குத்
தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”

என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

சிறந்த படங்கள்

* ராஜராஜன்
* ராஜகுமாரி
* மன்னாதி மன்னன்
* மந்திரி குமாரி
* திருடாதே
* மலைக்கள்ளன்
* அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
* மதுரைவீரன்
* புதுமைப்பித்தன்
* ஆயிரத்தில் ஒருவன்
* அன்பே வா
* எங்கவீட்டுப் பிள்ளை
* நாடோடி மன்னன்
* படகோட்டி
* ரிக்ஷாக்காரன்
* உலகம் சுற்றும் வாலிபன்
* ராமன் தேடிய சீதை
* அடிமைப்பெண்



அரசியல்


இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972-ல் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அவர் ஆரம்பித்தார்.

திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977-ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.

அ.தி.மு.க உதயம்

1972 அக்டோபர் 17 ! அன்றுதான் சர்வாதிகாரி ஜார் மன்னனை எதிர்த்துப் புரட்சித் தலைவர் மாமேதை லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டின் தொழிலாளர் வர்க்கம் புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்தது!.

ஆகா என்றெழந்தது யுகப்புரட்சி! அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன் ஜார்ஜ் மன்னன்! அந்தப் புனிதமான அக்டோபர் மாதம் 17 - ம் தேதியன்று தான் தமிழகத்தின் புரட்சித் தலைவர் புதுக்கட்சியைத் தொடங்கினார்! அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்னும் பெயரைச் சூட்டினார், புரட்சித் தலைவர்!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கியது குறித்த அறிவிப்பை வெளியிடும் பெரும் பேறு முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கத்துக்கு கிட்டியது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.

புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த புரட்சித் தலைவர், அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் ‘தென்னகம்’ நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.

தங்கள் புரட்சிநாயகன் புதியகட்சியைத் தொடங்கிவிட்டார்; அக்கட்சிக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டிவிட்டார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் அகமகிழ்ந்தனர்; ஆனந்தக் கூத்தாடினர். உடனடியாகத் தமிழகம் முழுவதிலும் அண்ணா தி.மு.க. கிளைகள் உருவாக்கப்பட்டன. கட்சிக் கொடிகள் அவசர அவசரமாய் உருவாக்கப்பட்டு ஏற்றப்பட்டன.

தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழர்கள் வாழும் பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கிளைகள் உருவாக்கப்பட்டன.

அதுவரை தி.மு.க. என்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்த கழகத்தை அதன்பின்னர் புரட்சித்தலைவர் ‘கருணாநிதி கட்சி’ என்றுதான் வழங்கினார்.

கருணாநிதி கட்சியிலிருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.

புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாள்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.

அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர்.

பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.

புரட்சி நடிகர் புரட்சித் தலைவர் ஆனார்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எனப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. ‘மக்கள் திலகம்’ என்று அவரை முதன்முதலில் வழங்கியவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன் ஆவார். ‘புரட்சி நடிகர்’ என்று அவரை விளித்தவர், கலைஞர் கருணாநிதி ஆவார். ‘பொன்மனச் செம்மல் என்று வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் ஆவார்.! ஆனால் புரட்சி நடிகராய் விளங்கிய எம்.ஜி.ஆரை முதன் முதலில் புரட்சித்தலைவர்’ என்று வழங்கியவர் ‘தென்னகம்’ ஆசிரியரும், அ.தி.மு.க.வின் முதல் அமைப்புச்செயலாளரும், பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினருமான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆவார்.

அ.தி.மு.க.வின் சார்பில், 1972 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதியன்று, சென்னை கடற்கரை சீரணி அரங்கில் ஒரு பிருமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கே.ஏ.கே. ”இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே வழங்கினோம். இனிமேல் அவர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர்! ஊழலை ஒழித்துக்கட்டும் தர்மயுத்தத்தின் தானைத் தலைவர்! இனி மேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே வழங்க வேண்டும்!” என்று கூறினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் ”புரட்சித் தலைவர் வாழ்க!, புரட்சித் தலைவர் வாழ்க!” என்று விண்ணதிர முழக்கமிட்டது. கடல் அலைகளின் ஓசை சில நிமிடங்கள் அமுங்கிவிட்டது போன்ற நிலை அங்கே தோன்றியது. புரட்சி நடிகராய் இருந்த மக்கள் திலகம், பொன்மனச்செம்மலாகிப் புரட்சித் தலைவராய் மாறிய வரலாறு இதுதான்!

எதிரிகள் விளைவித்த இன்னல்கள்

தமிழகம் முழுவதிலும் ஏராளமான தொண்டர்கள் புரட்சித்தலைவரின் இயக்கத்தில் தினசரி சேர்ந்து கொண்டிருந்தனர். சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட, அமைப்பாளர்களும் ஆளுங்கட்சியை விட்டு விலகினர். தாம் வகித்த பதவியின் மூலம் பெறக்கூடிய சலுகைகளையும் இலாபங்களையும் உதறினர்; கடுமையான அடக்கு முறைக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்த அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். அதைக் கண்ட தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்தது. அதனால் நாடு முழுக்க கடும் அடக்குமுறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அண்ணா தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்பட்டனர். ஏழை எளியவர்கள், கூலி வேலை செய்வோர், ரிக் ஷா, கைவண்டி இழுப்போர், மூட்டைத் தூக்குவோர், விவசாயக் கூலிகள், பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோர்தாம் அ.தி.மு.க. தொண்டர்களுள் பெரும்பாலானவர்களாய் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் மீது ஒருபுறம், குண்டர்கள் தாக்குதல் தொடுக்கப்பட்டது; மற்றொரு புறம் பொய் வழக்கிட்டு அலைகழிக்கும் தாக்குதல் இடைவிடாமல் தொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டங்களுக்கு போலீஸ் அனுமடி வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டப்பட்டது. பொது அமைதிக்குப் பங்கமு விளையும் என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது. அனுமதி பெற்று நடக்கும் அ.தி.மு.க. கூட்டங்களில் ஒரு கும்பல் கல் எறிந்து கலவரம் செய்தது; இன்னொரு கும்பல் நாய் நரியைப்போல ஊளையிட்டு இடையூறு விளைவித்தது.

அ.தி.மு.க. மேடைப் பேச்சாளர்க்ள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் தொடரப்பட்டன. புரட்சித் தலைவர் பேசிய பொதுக்கூட்டங்களைக்கூட ஒழுங்காக நடக்க விடாமல் தடுப்பதற்குச் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வளவுக்கும் மத்தியில்தான் புரட்சித்தலைவர் கட்சியைக் கட்டிக்காத்து வளர்க்க நேரிட்டது.
அந்த சமயத்தில் புரட்சித் தலைவர், கடலூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்றிருந்தார். அந்தக் கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடைபெறவிருந்தது. அக்கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் ஒருவர் குண்டர்கள் பலருடன் தடிக்கம்புகளுடனும் வந்து நின்றிருந்தார்.


ஊழல் ஒழிப்பு போராட்டம்


1972 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியன்று புரட்சித் தலைவரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்; 14 - ஆம் தேதியன்று நிரந்தரமாகவே (டிஸ்மிஸ்) நிக்கினார்கள்; எம்.ஜி.ஆர் 16 - ஆம் தேதியன்று அது பற்றி அறிவித்தார். 18 - ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 3 ஆம் தேதிக்குள்- எண்ணிப் பதினைந்தே நாட்களுக்குள் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலும் 6000 கிளைகள் தொடங்கப்பட்டன. 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 15 நாள்களில் 10 இலட்சம் உறுப்பினர்க்கைச் சேர்ந்த சாதனையை உலகில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதற்கு முன்னர் சாதித்ததே இல்லை.!

1949 இல் தொடங்கப்பட்ட தி.மு.க.வுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் - அதாவது, 1972இல் தான் -18,000 கிளைகளும், 15 இலட்சம் உறுப்பினர்களும் இருப்பதாகத் தி.மு.க. தலைவர் கருணாநிதியே அந்தச் சமயத்தில் ஒப்புக்கொண்டார். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் பத்து இலட்சம் உறுப்பினர்களையும், ஆறாயிரம் கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய சாதனை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்!.

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட சாதனை இது என்றுதான் கூறவேண்டும்.

இந்த சாதனை, புரட்சித் தலைவருக்கு தி.மு.கழகத்திலும், பொதுமக்கள் மத்திலும் எத்துணை செல்வாக்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டியது.

1972 - ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 5 - ஆம் தேதியன்று அண்ணா சாலையிலிருந்து பத்து இலட்சம் பேர் கொண்ட பிரும்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது. அதற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி, கிண்டி கவர்னர் மாளிகைக்குச் சென்று அப்போதைய ஆளுநர் கே.கே.ஷாவைச் சந்தித்தார். எம்.ஜி.ஆருடன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் எம். கல்யாண சுந்தரமும் இருந்தார்.

ஆளுநர் கே.கே.ஷோ, புரட்சித் தலைவர் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியலை பெற்றக்கொண்டார். அவர் அந்தப் புகார்களை முதல்வர் கருணாநிதிக்கே அனுப்பி, அவர் பதிலைப்பெற்று அதற்குகப் பின்னரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப முடியும் என்றும், அதுதான் சட்டப்படியான முறை என்றும் கூறினார்

ஆளுநரின் அச்சட்ட விளக்கத்தைப் புரட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால், அந்த ஊழல் புகார்ப்பட்டியலை ஆளுநரிடம் கொடுக்காமல் திரும்பினார், பரட்சித் தலைவர். நவம்பர் 6 - ஆம் தேதியன்று அவர் கம்யூனிஸ்டுத் தலைவர் கலியாண சுந்தரம், கே. பாலதண்டாயுதம், கே.ஏ.கே , எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோரை அழைத்துக்கொண்டு புதுடெல்லிக்குப் பறந்தார்; அன்றே இந்திய ஜனாதிபதி வி.வி. கிரியைச் சந்தித்து; அந்த ஊழல் புகார்ப்பட்டியலை ஜனாதிபதியிடம் கொடுத்தார்.
முதலமைச்சர்


1977 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தமிழக சட்ட மன்றத்திற்குத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் புதிய அணிகளை அமைத்தன.

ஜனதாக் கட்சி தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொண்டு தனியாகப்போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவை உதறிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டது.

அ.இ.தி.மு.க. கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைத் தங்களுக்குக் கோரின. புரட்சித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால், இந்திரா காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தங்களுக்குள் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு போட்டியிட்டன.

அ.இ.தி.மு.க. சில சிறிய கட்சிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது.

தி.மு.க. இரண்டாவது முறையாகப் பிளவுப்பட்டுக் களத்தில் நின்றது.

இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அனுதாபம் இருப்பினும் அது ஆட்சியைப் பற்றும் என்னும் நம்பிக்கை அந்தக் கட்சிக்காரர்களுக்கே இல்லை. ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் போதுமான அளவில் செல்வாக்கும் இருக்கவில்லை. எனவே, எஞ்சியிருந்த புரட்சித் தலைவரின் அ.இ.தி.மு.க.வின் மீது தான் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தேர்தல்கள் நடந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி தான் பெரும் வெற்றியைப் பெற்றது. புரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 127 தொகுதிகள் கிட்டின. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 17 இடங்கள் கிட்டின.

தி.மு.க. 48 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது. இந்திரா காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், ஜனதாக்கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

புரட்சித் தலைவர் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளநர் பிரபுதாஸ் பட்வாரி புரட்சித் தலைவரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தார்.


மறுபிறவி


1984 ஆம் ஆண்டு அக்டோபரில் திடீரென்று புரட்சித் தலைவரின் உடல் நிலையில் ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீபாவளிக்கு முதல்நாள் புரட்சித் தலைவரின் நோய் மிகவும் முற்றி கவலைக்கிடமான நிலை தோன்றியது. அந்தத் தீபாவளியே இருண்ட தீபாவளி ஆயிற்று.

புரட்சித் தலைவரின் உடல்நிலை மோசமானதும் டாக்டர்கள் அமெரிக்காவிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் விரைந்து வந்து அவருக்குச் சிகிச்சை செய்ய அவரை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. செய்தியறிந்த பிரதமர் இந்திராகாந்தி சென்னைக்கு விரைந்து வந்தார்; புரட்சித் தலைவரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். புரட்சித் தலைவர் கலங்கிய கண்களோடு தம் நன்றியை மொனமாய்த் தெரிவித்தார்.

”உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இந்தச் சோதனையிலும் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை!” என்று ஆறுதல் கூறி விட்டு, விடைபெற்றுக்கொண்டார்.

புரட்சித் தலைவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்குத் தேவையான விசேஷ விமானம் உட்பட சகல வசதிகளையும் செய்துகொடுக்க உத்தரவிட்டார், இந்திரா காந்தி.

புரட்சித்தலைவர் அமெரிக்காவுக்குச் சென்று புரூக்களின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நாட்டு மக்கள் அனைவரும் அவருக்காகப்பிரார்த்தனை செய்தனர். அந்தப் பிரார்த்தனையும், புரட்சித்தலைவரின் மன உறுதியும் அவரைக் காலனிடமிருந்து காப்பாற்றியது.

இறப்பு

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சீக்கிய காவலர்களால் பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டு மரணமடைந்தார். அந்தச் செய்தியை புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இரு மாதங்களுக்குப் பின்னர்தான் தெரிவித்தார்கள். அது புரட்சித் தலைவரின் உள்ளத்தில் ஆறாத புண்ணாக நிலைத்துவிட்டது. அதற்குப் பின்னர் பிரதமராகப் பதவியேற்ற ராஜூவ் காந்தியைத் தம் சொந்தத் தம்பியாகவே கருதிப் பழகிக் கொண்டிருந்தார் புரட்சித்தலைவர். அவரும் அப்படியே பழகினார்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதியன்று சென்னையில் நடந்த நேருஜியின் சிலை திறப்பு விழாவில் பிரதமர் ராஜூவ்காந்தியும் புரட்சித் தலைவரும் கலந்துகொண்டனர்.. அதுதான் அவர் கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி!

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதியன்று காலையிலிருந்தே புரட்சித் தலைவரின் உடல்நிலையில் சில விபரீதமான மாறுதல்கள் தோன்றின. மருத்துவர்கள் விரைந்து வந்து செய்த சிகிச்சையெல்லாம் பலன்றறுவிட்டன.

டிசம்பர் 24 ஆம் தேதியன்று அதிகாலையில் அந்தச் சரித்திர நாயகரின் வரலாறு முடிந்தது!

அந்த சாதனை மன்னனுக்கும் சாவு வரக்கூடும் என்பதைத் தமிழகம் நம்ப மறுத்தது.!

அது உண்மைதான் என்று தெரிந்தபோது ஆறாத சோகத்திலும் அதிர்ச்சிலும் மூழ்கியது! வாழ்க்கை முழுக்க சாதனைக்கு மேல் சாதனையாகப் படைத்த அந்த வரலாற்று நாயகர் தம் சாவிலும் ஒரு சாதனையைப் படைத்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் ராஜாஜி மண்டபத்திலிருந்து அண்ணா சாலை, கதீட்ரல் சாலை வழியாகச் சென்றபோது பல இலட்சம் மக்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

”அவர் நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் ஊர்வலம்” என்று பத்திரிகைகள் எழுதுவதுண்டு. அந்த வரலாற்று நாயகன் உண்மையாகவே அன்று இறுதியாக ‘ஊர்வலம’ புறப்பட்டபோது, கடல் அலையே திரண்டு வந்ததுபோல மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததில் வியப்பேது!

ஒரு வரலாறு முடிந்தது!

ஒரு சகாப்தமும் நிறைவுற்றது!

அவர் எழுதிய உயில்!

1986 ஆம் ஆண்டு ஆகஸ்டில் புரட்சித்தலைவர் எழுதிய இறுதி உயிலில் அ.இ.அ.தி.மு.க.வுக்குச் சத்யா ஸ்டுடியோ மற்றும் தலைமைக்கழக்க கட்டடம் முதலிய சொத்துக்களை எழுதி வைத்தார். தம் காலத்திற்குப் பிறகு கட்சி உடையாமல் இருக்கவேண்டும் என்று விரும்பிய அவர், அந்தச் சொத்துகளின் வருமானத்தைப் பெறக் கட்சி பிளவுபடக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தார்.

1987 ஆம் ஜூலை மாத்த்தில் புரட்சித் தலைவர் மீண்டும் உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்குச் சென்றார்; ஒரு மாத காலச் சிகிச்சைக்குப் பின்னர் தாயகம் திரும்பினார்.

நினைவிடம்

நினைவகம் பெயர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம்
முகவரி மெரினா கடற்கரை, சென்னை - 600 005
மொத்த பரப்பளவு 33,371 சதுர மீட்டர்
கட்டடத்தின் பரப்பளவு 12,752
அரசுடமை ஆக்கப்பட்ட நாள் 24-12-1987
திறக்கப்பட்ட நாள் 24-12-1992


0 comments: