கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .
வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.
கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.
பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.
ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இவருக்கும் மிகவும் ஆழமான நட்பு நிலவியது. ஆயினும் அரசியல் வேறுபாடுகளினால் இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும் நிலவியது. அதன் காரணமாக ஒருவரையொருவர் தமது வெளியீடுகளிலே சாடியதும் உண்டு. இருப்பினும் எங்கேயாவது சந்தித்துக்கொண்டால் அவர்களது நட்பு தலைதூக்குவது உண்டு.
இப்படியாக காவியம் படைத்த நாயகன் தனது வாழ்க்கையின் 2ம் பாகத்திலே நாத்திகவாதத்திலிருந்து முழு ஆத்திகவாதியாகினான் . அதன் விளைவாக எமக்கு கிடைத்த படைப்புக்களில் ஒன்றே "அர்த்தமுள்ள இந்துமதம்" என்ற பொக்கிஷம் .
இத்தகைய புகழ்படைத்த தமிழ்ப் புதல்வனை குறுகிய காலத்தினுள்ளே தன்னுடன் சேர்த்துக் கொண்டான் ஆண்டவன் .
ஆனால் கண்ணதாசனால் ஏற்றப்பட்ட இந்த இலக்கியச் சுடர், என் போன்ற ரசிகர்கள் இதயத்தினுள்ளே அணையாத் தீபமாக என்றுமே ஒளிவீசிக்கொண்டிருக்கும் என்பது உறுதி.
அவரது வார்தைகளிலேயே பார்த்தோமானால்
" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை "
என்று பாடியுள்ளார் அது எத்தகைய உண்மை.
கவியரசர் முக்கியமாகக் கொண்டிருந்த நோக்கம் தனது பாடல்களின் மூலம் சங்க காலத் தமிழ் இலக்கியத்தை , ராக்கெட் வேகத்தில் போகும் இந்த அவசரச் சமுதாயத்திற்கு விளங்கக்கூடிய வகையில் எளிமையாக தமிழில் வழங்குவதாகும். இந்த வாரம் , கம்பனின் இலக்கியத்தை எவ்வாறு இலகுவான தமிழில் நமக்கு நமது கவியரசர் கொடுத்தார் என்பதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்.
கம்பனும் கண்ணதாசனும்
இலக்கியவாதிகளும் , ஆன்மீகவாதிகளும் மட்டுமே அறிந்திருந்தவர் கம்பர் . கம்பனின் சாயல் கண்ணதாசனில் , எழுத்துக்களில் நிறையவே தெரியும்.
கைகேயி பெற்ற வரத்தின்படி இராமனுக்கு அரசு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே .அதைக் கேட்டதும் ஆதிசேட அவதாரமான இலட்சுமணனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்து விட்டது.அந்தக் கோபத்தினால் கைகேயி , பரதன் , தசரதன் எல்லோரையுமே ஒழித்து விடுகின்றேன் என்று வில்லை வளைத்து ஒலி எழுப்புகின்றான் . அப்போது அங்கே வந்த இராமன் இலட்சுமணனை சாந்தப்படுத்துகின்றார். “ தம்பி கோபப்படலாமா ? இது தவறல்லவா ? நதிக்குப் போகின்றோம் , நதியினில் தண்ணீர் இல்லை , அதற்காக நதியைத் திட்ட முடியுமா? நதியின் மீது தவறுண்டா? அது போலத்தான் இதுவும். எனக்கு அரசில்லாமல் போனது தசரதர் குற்றமில்லை , கைகேயின் குற்றமில்லை , பரதன் குற்றமுமில்லை பின் யார் குற்றம்? விதியின் குற்றமப்பா, விதியின் குற்றம்” என்கின்றார். இதற்கான கம்பரின் பாடல் பின்வருமாறு:
நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து
நமைப் புரந்தான்
மதியின் பிழை அன்று மகன்பிழை
அன்று மைந்த !
விதியின் பிழை இதற்கு என்னை
வெகுண்டது என்றான்.
இந்தப்பாடலின் கருத்தை மறந்துவிட்டு , பாடலை மட்டும் படித்து பாருங்கள் . சுலபத்தில் பொருள் விளங்காது . கடினமாக இருக்கும் . இதே கருத்தை மிகவும் சுலபமாக நம் மனதினில் பதிய வைக்கும் கண்ணதாசன் பாடலைப் பார்க்கலாம் . தியாகம் என்ற படத்தில் வரும் அந்தப் பாடல் வரிகள் இதோ :
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறு யாரம்மா ?
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை - கம்பர்
நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை - கண்ணாதாசன்
விதியின் பிழை - கம்பர்
விதி செய்த குற்றம் - கண்ணதாசன்
காவியத்தலைவன் கண்ணதாசன் ஒரு கவிப்பெருங்கடல். அவரின் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே தமிழன்னையை அலங்கரிக்கும் நவநாகரீக அணிகலன்கள். அந்தக் கவிதைக்கடலில் எழுந்த அலை அடித்தபோது எங்கோ பட்டுத் தெறித்த ஓர் நீர்த்திவலை போன்றதுதான் என் கவியறிவு. ஆனால் அந்தக் கடலின் ஓர் ஓரத்தில் மூழ்கி எழுந்து மகிழ்வது என் அவா அந்த அனுபவத்தினை நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் நோக்கம்.
இந்த வாரம் கவியரசர் பகவத்கீதையை எமக்கு புரியவைக்கும் முயற்சியின் ஓர் அங்கத்தினைப் பார்ப்போம்.
கீதையின் கூற்று
பூர்யமானம் அசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப : ப்ரவிசந்தி யத்வத்
த்வத்வத்காம யம் ப்ரவிசந்தி ஸர்வே
ஸ சாந்திமாப்நோதி ந காமகாமீ
என்ன? ஒன்றுமே புரியவில்லையா? வருத்தப்படாதீர்கள். எனக்கும்தான் புரியவில்லை. ஆனால் கவிச்சக்கரவர்த்தியின் முயற்சியின் முழு வெற்றியையும் உணர வேண்டுமானால் கீதையை அப்படியே கூறி பின்பு அதை அவர் எப்படி கையாளுகின்றார் என்று அறியத் தரவேண்டும் .
மேலே கூறிய கீதையின் விளக்கம்
கடல் நிறைந்து காணப்படும். அதனுள் எவ்வளவு மழைத் தண்ணீர் வந்து எவ்வழியில் சேர்ந்தாலும் அது ஒரு போதும் துள்ளிக் குதித்து கரையை மீறுவது கிடையாது. அதே போன்று அந்தக் கடலின் நீர் வெய்யிலின் நிமித்தம் நீராவியாகிப் போகின்றது. இருந்தபோதும் அது ஒருபோதும் உள்ளே சென்று மறைவதில்லை, என்றுமே நிலைகுலையாது அமைதியாக உள்ளது. நிலையான உள்ளம் கொண்ட மனிதன் ஒருபோதும் கலங்க மாட்டான். ஆனால் உள்ளம் நிலையற்று இருப்பவன் ஒருபோதும் அமைதியடையமாட்டான்.
கண்ணனுக்கு தாசனான கண்ணதாசன் கண்ணனின் கீதையை எப்படி எம் மத்தியில் புகுத்துகின்றார் என்று பார்ப்போம்.
அவன்தான் மனிதன் படத்திலே வரும் ஆட்டுவித்தால் யாரொருவர் எனும் பாடலில் மேற்கூறிய கீதையின் விளக்கத்தை சாதாரண தமிழில் கண்ணாதாசன் தனக்கே உரிய பாணியில் கூறுவதைப் பாருங்கள்:
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன்
துன்பமெல்லாம் விலகும் கண்ணா
எவ்வளவு பெரிய தத்துவம்! எவ்வளவு பெரிய கீதையின் கூற்று! எப்படி எளிமையாக மக்கள் அனைவருக்கும் புரியக் கூடிய வகையில் கவியரசர் கூறியிருக்கின்றார்!
இந்த வியத்தகு கவிஞரின் அற்றலை எடுத்துக்காட்ட இன்னுமோர் உதாரணமாக பட்டினத்தாரின் பாடலை அவர் எப்படி எளிமைப்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்:
பட்டினத்தாரின் பாடல்
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே
விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும்
சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை
புண்ணிய பாவமுமே
இதன் கருத்து:
செல்வமும் உறவும் வருவது வீடுவரைதான். கதறி அழும் மனைவி வருவது வீதி வரை மட்டும்தான். அடித்துக் கொண்டு அழும் பிள்ளையின் விஜயம் சுடுகாடு மட்டும்தான். ஆனால் கடைசி வரை கூட வருவது செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான்.
பட்டினத்தாரின் இப்பாடலைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் அந்த ஞானியின் தத்துவத்தை எவ்வாறு எம்மிடையே கவிஞர் உலவ விடுகின்றார் என்று பாருங்கள் நண்பர்களே !
பாதகாணிக்கை எனும் படத்தில் வரும் பாடலிது:
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
கவனித்தீர்களானால் கடைசி வரியான பாவமும் புண்ணியமும்தான் கடைசிவரை கூடவரும் என்ற வாக்கியத்தை கவிஞர் விட்டு விட்டார். இதைப்பற்றி நண்பர் ஒருவர் வினவியதற்கு கவிஞர், “அப்படி ஓர் அருமையான வாக்கியத்தை சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு. அதனால் தான் அதை பாடலில் குறிப்பிடவில்லை” என்றாராம்.
மற்றவரின் ஆற்றலை மதிக்கும் மனப்பான்மை கவிஞரிடம் சிகரம் தொட்டு நிற்பதைப் பார்த்தீர்களா?
இன்று பட்டினத்தாரின் கருத்தை பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கச் செய்த கவிஞரின் ஆற்றலை என்னவென்பது!
சிலநேரங்களிலே நாம் செய்வதறியாது ‘போர்`’ அடித்துப் போய் உட்கார்ந்திருப்போம் அல்லவா? அப்படித்தான் கவிஞர் கண்ணதாசனின் கற்பனையில் இருந்த கடவுளுக்கும் ஓர்நாள் போரடித்து விட்டதாம்.”என்னடா நான் படைத்த உலகத்தை ஒருமுறை பார்த்து வருவோமே" எனக் கிளம்பி விட்டாராம். பிறந்தது அந்த முதல் வரி தமிழ்க்குமரனின் எண்ணக் கருவறையிலிருந்து.
கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்
வந்தவர் சும்மா இருக்கவில்லையே தெருவில் போவோர் வருவோரை எல்லாம்”சுகமாக இருக்கின்றீர்களா?” என விசாரிக்க வேறு தொடங்கி விட்டாராம், எப்படிப் போகின்றது கவித்தலைவனின் கற்பனைத் தேர்!
வழியில் வந்த மனிதரையெல்லாம் நலமா? என்றாராம்
சும்மா இருப்பானா நம் மனிதன்? எல்லாவற்றையும் பற்றி முணுமுணுப்பவனல்லவா. ‘ஹா இதுவல்லவா வாழ்க்கை, இதைவிடை என்ன சொர்க்கம் இருக்கய்யா?’ என்று மகிழ்கின்றான் ஒருவன். மற்றொருவனோ”சே, போய்யா என்ன வாழ்க்கை இது?’என்கின்றான்.
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
என்ன அருமையாக வார்த்தைகளோடு விளையாடியிருக்கின்றார் கண்ணதாசன் பார்த்தீர்களா? சாதாரணமாக யாராவது பாட்டெழுதினால்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் வாழ்வைக் கொடுமை என்றான் என்று எழுதியிருப்பார்கள். அதில் ஒரு தப்பில்லை ஆனால், கவித்தலைவனோ அதற்கு இன்னுமொரு அர்த்தத்தையும் கொடுக்க எண்ணினான். அதாவது ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்னும் போது, அவனது இனிமையான வாழ்வைப் பொறுக்க முடியாமல் மற்றவன் இவனது இனிமையான வாழ்க்கையே தனக்கு கொடுமை என்கின்றான் .
“ ஒரு மனிதன் அதுவே கொடுமை" என்றான் என்பதன் மூலம், மனித மனத்தின் பொறாமை குணாம்சத்தை எப்படி விளக்கியுள்ளார் இந்தக் கவிச்சக்கரவர்த்தி பார்த்தீர்களா? இதைக்கேட்டதும் படைத்தவனுக்கு”என்ன மனிதர்களடா? இப்படி பொறாமை படைத்தவர்களாக இருக்கின்றார்களே" என்று எண்ணி சிரிப்பு வர உடனே சிரித்து விட்டானாம் நம்ப கடவுள்.
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் .
சிரிப்புடன் கூடவே கடவுளுக்கு சிந்தனையும் வந்தது.” என்னடா இது, இவர்களுக்குப் படைக்கும் போது நான் கொடுத்தது கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் தானே, எப்படியடா காசு, பணம், சொத்து என்று அலைந்து, எல்லாவற்றையும் அடையும் பேராசை வந்தது?
எல்லையேயில்லாத நீரும், நிலமும், வானும் நான்தானே கொடுத்தேன், சொந்தக்காரன் நானிருக்கும்போதே சொந்தம் கொண்டாடுகிறார்களே பாவிகள்.என்ன மனிதரோ! படைத்தவனுக்கே வந்துவிட்டது குழப்பம், நம் மனிதனின் சுயநல போக்கைக் கண்டு.
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் சையும் இங்கே யார் தந்தது?
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது?
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை
கண்ணதாசன் மேலே அர்த்தத்தோடு வரிகளை கையாண்டிருப்பதை பாருங்கள் தோழர்களே! கடவுள் எல்லையில்லாதவன் அதனால் அவன் படைத்த நீரும், நிலமும் எல்லையில்லாதது என்றுகூறி, கடவுள் எல்லையில்லாமல் வியாபித்திருப்பவன் என்று நம்மை உணர வைக்கின்றார் கவிஞர்.
இவற்றையெல்லாம் பார்த்துச் சலித்துப்போன கண்ணதாசனின் கடவுள் ஓர் இடத்தில் நின்றுவிட்டாராம், எங்கே?
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்.
அங்கே நிற்கின்ற நம் கடவுள் இந்த மகிழ்ச்சியாக, எந்த வித வேறுபாடுகளுமற்ற உள்ளத்துடன், உண்மைத் தோழமையோடு ஓடி வரும் குழந்தைகளைக் கண்டதும்” அடடா! போட்டி, போறாமை கொண்டு அலையும் இந்த மனிதர்களால் குழந்தைகளின் வெள்ளை உள்ளத்தை மட்டும் இன்னும் கெடுக்க முடியவில்லை, அன்பைத் தவிர வேறு ஒன்றுக்குமே மயங்காத இந்தக் குழந்தைகள் இருக்கும் வரை என் படைப்பின் தத்துவம் அழியாது" என்று எண்ணினார்.
போதுமடா எனது பூமிச் சுற்றுலா எனத் திரும்பி தனது மேலுலகிற்கே திரும்பி விட்டாராம் .
பச்சைப்பிள்ளை கிள்ளை மொழியில்
தன்னைக் கண்டாராம்
உண்மை கண்டது போதும் என்று
வானம் சென்றாராம்.
நண்பர்களே! கண்ணதாசன் எனும் அந்தக் காவியக் கடலில் என்னோடு சேர்ந்து இனிய பயணத்தை மேற்கொள்ளும் உங்களை அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கிறேன்.
ஆதார உதவி : வெப் உலகம்
***************************************************************
கண்ணதாசன் கூற்று
அன்று எத்தனையோ புத்தகங்கள் எழுதக்கூடிய அளவிற்கு உடலில் வலுவிருந்தது.
ஆற்றல் பொங்கி வழிந்தது.
ஆனால் வெறும் இரத்தத் துடிப்புக்கு முதலிடம் கொடுத்து பொன்னான காலத்தை விரயமாக்கினேன்.
இன்று எத்தனையோ எழுத வேண்டும் என்று துடிக்கின்றேன், அனுபவங்கள் பொங்கி வழிகின்றன. ஆனால் எனது பாழாய்ப்போன உடம்பு விட்டுக்கொடுக்க மறுக்கின்றது .
இளைஞனே என்னைப்பார்த்து விழித்துக்கொள்
காலம் பொன்னானது காலம் தாழ்த்தி உணர்ந்து கொள்ளாதே !
(கண்ணதாசனின் பல நூல்களில் இருந்து திரட்டியவை)
கவிஞர் கண்ணதாசன் கவிதை மட்டுமல்ல, திரைப்படப்பாடல்கள் மட்டுமல்ல, கதைகள் மட்டுமல்ல, கட்டுரைகள் மட்டுமல்ல யாவற்றிலுமே சிறந்து விளங்கினார். கவிஞரின் கட்டுரைத் தொகுப்புக்களில் "எண்ணங்கள் ஆயிரம்" என்பதும் ஒன்று. இதன் முதல் கட்டுரையைப் பார்க்கும் முன் அதன் முன்னுரையாக கவிஞர் கூறியவற்றைப் பார்ப்பது இந்த இடத்திற்குப் பொருந்தும் என்பது எனது எண்ணம்.
அன்றும் இன்றும்
(இது 10.4.1978 எழுதப்பட்டதாகும்)
ஒரு காலத்து எழுத்துக்கள் மறு காலத்தில் அதிசயமாவதும் உண்டு, கேலிக்கிடமாவதும் உண்டு. எனது பழைய எழுத்துக்கள் சிலவற்றை இப்போது நானே படித்துப் பார்த்தால் "நாமா இப்படி எழுதினோம்?" என எண்ணத் தோன்றுகிறது. சில எழுத்துக்களோ "சீ! இவ்வளவு மட்டமாகவா எழுதினோம்" என்று எண்ணவும் தோன்றுகின்றது. புத்தகம் வெளியிடுவதில் புதிய உற்சாகம் பொங்கி வழியும் காலம் இது. புதிய நூல்களோடு எனது பழைய எழுத்துக்களில் தரமானவையும் விடாமல் தொகுக்கப் படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் சோ அவர்கள், தனது "துக்ளக்" பத்திரிகையில் ஏதாவது எழுத வேண்டும் என்று கேட்டார். "எண்ணங்கள் ஆயிரம்" என்ற தலைப்பையும் அவரே சொன்னார். சிலகாலம் அந்தத் தலைப்பில் எழுதி வந்தேன்.
அவை இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. என் குழந்தைகளுக்குப் புத்தகம் போடுவதில் இப்போது தீராத ஆசை. அண்மையில் திருமணமான என் மூத்த மகன் "காந்தி" (இது எழுதப்பட்டது 1978ம் ஆண்டு), பாதிப் பங்காளியாக உள்ள "கீதாசமாஜம்" இந்த நூலை வெளியிடுகின்றது.
பல்வேறு காலத்திய கருத்துக்கள் என்றாலும், என்னுடைய சிந்தனையோட்டம் ஒரே மாதிரி இருப்பதை இந்தக் கட்டுரைக் குவியல் சுட்டிக் காட்டும்.
அன்பன்
கண்ணதாசன்
மேலே உள்ள கண்ணதாசன் அவர்களின் முன்னுரையை நான் தந்ததிற்குக் காரணம், கவிஞரின் சிந்தனைத் தடாகத்தின் நீர் எவ்வளவு தெள்ளத் தெளிவாக இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்கே. அவர் தன்னைத் தானே விமர்சித்தார். அதன் மூலம் எழுந்த வினாக்களுக்குத் தானே விடைகாண முற்பட்டார். உண்மைகள் பூதாகரமாக அவர் முன்னே எழுந்து நின்றபோது அவர் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை, அதைத் துணிவாக எதிர் கொண்டார். அதன் மூலமே அவருடைய எழுத்தாக்கங்கள் எந்தவொரு காலகட்டத்திற்கும் உகந்ததாக மிளிர்கின்றது.
இனிக் கவிஞரது கட்டுரை ஒன்றைப் பார்ப்போம்.
நம்பிக்கை 1
நம்பிக்கையில்தான் நானும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஆனால், என் நம்பிக்கை வரையறுக்கப்பட்டிருகின்றது. என் தகுதிக்கும், திறமைக்கும் உட்பட்டே, அந்த நம்பிக்கை தன் ராஜ்ஜியத்தை நடத்துகின்றது. தகுதி வளர்ந்தால்தான் எனது நம்பிக்கை வளர்கிறது.
சிறிய கொடிகளில் பெரிய பூசணிக்காய் காய்ப்பது போல், சிலரது நம்பிக்கை அவர்களது சக்தியை விட அதிகமாக இருக்கின்றது.
பெரிய மாமரம் சிறிய கனிகளை ஈன்றெடுப்பது போல,எனது சக்தி, எனது நம்பிக்கையைத் தாலாட்டுகின்றது. "இமயமலையின் மீது ஏறிவிடலா" என்று மனிதன் நம்புகிறான்; ஏற முயற்சிக்கிறான். கால்களில் வலுவில்லை. கடைசியில் ஒரு குன்றின் மீது நின்று கொண்டு "இதுதான் இமயம்" என்று சாதிக்கிறான்.
சொல்லித் திருத்த முடியாத வாதங்களை ஏற்றுக் கொண்டு விட்டால் தொல்லை இல்லை என்பதால், மற்றவர்களும் அதை ஒப்புக் கொள்கிறார்கள். களிமண்ணால் சிலை செய்ய முயற்சிக்கும் ஒரு சிற்பி, மண்ணாலேயே ஒரு மாளிகை கட்ட முயற்சிக்கிறான். "காகிதக் கப்பலைக் கடலிலே விடுவேன்;அதை ஓட்டியும் காட்டுவேன்; கரையிலும் சேர்ப்பேன்" என்பது ஒருவனது வாதம்.
இரண்டு காலடிகள் ஒழுங்காக விழுந்து விட்டதாலேயே, கால்களில் எண்ணையைத் தடவிக் கொண்டு வழுக்குப் பாதைகளில் ஏறுவேன் என்பது இன்னொருவரின் வாதம். ஒரு வெற்றி, பல வெற்றிகளைக் கனவு காண்கின்றது. ஒரு சக்தி, பல சக்திகள் தனக்கிருப்பதாக நம்புகின்றது மத்தளத்தில் புல்லாங்குழல் வாசிக்க ஒரு முயற்சி.
தாரையும், கொம்பும் ஸ் ரி க ம ப த நி பாடுகின்றன. சிலகாலம் அவைகளையும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் நம்பிக்கை அளவுக்கு மீறியதாக ஆகும் போது, அழிவும் கேலியும் எதிரே நிற்கின்றன. கோழிக்குஞ்சைப் பிடித்து விட்ட தைரியத்தில் ஒருவன் யானையையும்- பிடிக்க தயாராகிறான். கேரம்போர்டில் வெற்றி பெற்றுவிட்ட மயக்கத்தில் கிரிக்கெட் பந்தயத்திற்கு ஒருவன் தயாராகிறான். போலந்தையும்,செக்கோஸ்லாவாக்¢யாவையும் பிடித்த மயக்கத்தில் சோவியத் யூனியனுக்குள் நுழைந்த ஹிட்லரைப் போல். நீச்சல் குளத்தில் நீந்தப் பழகியவன், "கடலிலும் குதித்துக் கரையேறுவேன்" என்கிறான்.
நம்பிக்கை தரும் வெற்றிகளை விட தோல்விகள் அதிகம். அந்தத் தோல்விகளும், வெற்றிகளே என்பது ஒருவனது நம்பிக்கை. நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் மிருகங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
தங்கள் சக்திக்கேற்பவே அவைகள் நம்பிக்கை வைக்கின்றன. நம்பிக்கை துளிர் விடும் போது அச்சம் அற்றுப் போகின்றது. அச்சம் அற்றுப்போன இடத்தில், "எது செய்தாலும் சரியே" என்ற துணிவு வருகின்றது. அந்தத் துணிவு, தோல்வியைக் கூட்டி விடுகிறது. தோல்வி நம்பிக்கையை சாக அடிக்கிறது. மனித மனம், பழைய நிலைக்குத் திரும்புகின்றது. மனிதனது கடைசி நம்பிக்கை, மயானம். இந்த நம்பிக்கை மட்டும் தோல்வியடைந்ததே இல்லை.
பாஞ்சாலியைத் துகிலுரிந்த போது கெளரவர்களுக்கிருந்த நம்பிக்கை பாரதப்போர் வரையிலும்தான் இருந்தது. எதிரியின் சக்தி என்ன என்று தெரியும்வரை, ஒருவன் கொண்டிருக்கும் நம்பிக்கையை யார் தடுக்க முடியும்?
சமுதாயம் சிலரது நம்பிக்கைகளை வியப்போடும், திகைப்போடும் பார்க்கிறது. நான் யாருடைய நம்பிக்கையையும் வேடிக்கையாகப் பார்க்கிறேன். மரணத்தின் பின் மனித ஏடுகள் பரிசீலிக்கப் படும்போது, எது சரி, எது தவறு என்பது தெரியப் போகிறது. அதுவரை சர்க்கஸ்காரனுக்கு அடங்கும் புலியைப்போல், என் நம்பிக்கையை என் அளவுக்குள் வைத்திருக்க விரும்புகிறேன்.
0 comments:
Post a Comment